கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு நடந்தத் தேர்தலில், துணைத் தலைவராக எஸ்.கதிரேசன், கவுரவ செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளராக எஸ். சந்திரபிரகாஷ் ஆகியோர் வெற்றிப் பெற்றனர். கவுன்சில் விதிகளின்படி, தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நேரடியாக தமிழ் திரைப்படங்கள் தயாரிக்காத மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் பதவி வகிக்க தடை விதிக்கக் கோரி திரைப்பட தயாரிப்பாளர்கள் கே. ராஜன், பி.டி. செல்வகுமார், என். சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் நிர்வாகிகளாக மூவரும் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, நிர்வாகிகளாகத் தேர்வான மூவரும் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுதேர்தலை நடத்த இருதரப்பினருக்கும் சம்மதமா? என்று கேள்வி எழுப்பி இருதரப்பும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர். அதுவரை, நிர்வாகிகளாக கதிரேசன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஆகியோர் பதவி வகிக்க தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவிற்குத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாம் என்று நாடாளும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் - இயக்குநர் லிங்குசாமி