- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் கீரைகளை நாம் தினசரி வாழ்வில் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் மருந்தாக மட்டும் பயன்படும் மூலிகைகளைப் பதிவு பெற்ற மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என இந்திய முறை மருந்துகளுக்கு மாநில உரிமம் வழங்கும் அலுவலர் போ.ரா.மானேக்சா எச்சரித்துள்ளார்.
இந்திய மருத்துவ முறையான சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளைத் தயார் செய்து விற்பனை செய்வதற்கு இந்திய முறை மருந்துகளுக்கு மாநில உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டும். மேலும் சித்த மருத்துவப் படிப்பினை முடித்தவர்கள் அவர்களிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெறவரும் நோயாளிக்கு அவர்களே தயார் செய்த மருந்துகளை அளிக்கலாம்.
சித்த மருத்துவத்திற்கான சிகிச்சையைப் பதிவுப்பெற்ற மருத்துவர்களின் ஆலோசனையின் படி மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் கிளினிக்கிலும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இயற்கை முறை மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து மாநில உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருந்துகள்) போ.ரா.மானேக்சா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யாேகப் பேட்டியில் கூறியதாவது:
சித்தா, யுனானி, ஆயுர்வேதா மருந்துகளைத் தயாரிக்கவும், அதனை விற்பனை செய்ய எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?: சித்தா ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருந்துகளைப் பொறுத்த வரையில் இரண்டு முறைகளில் லைசன்ஸ் வழங்குகிறோம். முதலில் மருந்து தயாரிக்கும் உரிமம் மற்றும் லோன் லைசன்ஸ் அனுமதி வழங்குகிறோம். இந்த மருந்து தயாரிப்பதற்குச் சித்த மருத்துவர், தாவரவியலாளர்(Botanist)- ஆக இருக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்து தயாரிப்பதற்கு ஒரு ஆயுர்வேத மருத்துவர் மற்றும் தாவரவியலாளர்(Botanist) முக்கியமாக இருக்க வேண்டும். யுனானி மருத்துவம் தயாரிப்பதற்கும் ஒரு யுனானி மருத்துவர் மற்றும் தாவரவியலாளர்(Botanist) கட்டாயம் இருக்க வேண்டும். 1200 சதுர அடி அளவு தேவையான இடம் இருப்பதுடன் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும்.
மருந்துகள் விற்பதற்கான அனுமதி உரிமம் எவ்வாறு வழங்கப்படுகிறது?: இந்த வகை மருந்துகளைப் பொறுத்தவரையில் சாஸ்திரிக் மருந்துகள், ஆய்வு செய்து கண்டறியப்படும்( proprietary medicine) மருந்துகள் என 2 ஆகப் பிரிகிறது. சாஸ்த்ரிக் மருந்துகள் என்பது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் அல்லது ஆயுர்வேதா வைத்தியர்கள், யுனானி மருத்துவத்தில் ஹக்கீம்ஸ் நூல்களில் குறிப்பிட்டுள்ள மருந்துகள் ஆகும். சித்தர்கள் அல்லது வைத்திய நூல்களில் கூறப்பட்டுள்ள ஃபார்முலாவைக் கொண்டு புதிதாகத் தயாரிக்கும் மருந்துகள் proprietary medicine எனக் கூறுவோம்.
இந்த மருந்துகளுக்கான உரிமம் வழங்குவதற்கு முன்னர், மருத்துவக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் அந்த மருந்திற்கான உரிமம் வழங்கப்படும். அவர்கள் கூறியுள்ள மருந்து சரியான நோய்க்குரிய விதிமுறைகளின்படி இருக்கிறதா என்பதை ஏற்கனவே கூறப்பட்டுள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ நூல்களில் ஆய்வு செய்து, அதில் கூறப்பட்டுள்ள மருத்துவ முறைகளுக்கு ஒப்பாக இருந்தால், ஆலோசனைக்குப் பின்னர் அதற்கு அனுமதி வழங்குவோம்.
மருந்திற்கான உரிமம் வழங்குவதற்கு முன்னர், அந்த மருந்து எவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது குறித்தும் அதனுடைய நிலைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, அந்த மருந்தில் எந்தெந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்வோம். அதன் பின்னர்தான் மருந்திற்கான அனுமதி முறைப்படி வழங்குவோம்.
சித்த மருத்துவத்தில் இரும்பு தாதுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதா?: எல்லாம் மருந்து தயாரிக்கும் முறைகளிலும் தாதுக்கள் பயன்படுத்தப்படுகிறது. நமது உடல் தாதுக்களால் ஆனதுதான். அண்டத்தில் உள்ளது தான் பிண்டம், பிண்டத்தில் உள்ளது தான் அண்டம். மண்ணில் என்னென்ன மெட்டல் மற்றும் மினரல்ஸ் இருக்கிறதோ, அது நமது உடம்பிலும் கட்டாயம் இருக்கும். இரும்புச்சத்து நவீன மருத்துவத்திலும் தாராளமாகப் பயன்படுத்துகின்றன. சித்தா, யுனானி, ஆயுர்வேதா பதிவு பெற்ற மருத்துவர்கள் வழங்கக்கூடிய மருந்துகள் தரம் உள்ளதாக இருக்கும்.
இரும்புச்சத்து உடம்பிற்கு மிகவும் தேவையான ஒன்று. உடலில் ஹீமோகுளோபின் அளவு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அது ஆண்களுக்கு 14 முதல் 18டெசிலிட்டர் வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12 முதல் 16 டெசிலிட்டர் வரை இருக்க வேண்டும். இதற்கு இரும்புச் சத்து மிகவும் இன்றியமையாதது. மருந்தில் இரும்புச் சத்து குறித்து முறையாகப் பரிசோதனை செய்து, அதில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை என்பதை அறிந்த பிறகு தான் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புது வினோதமான நோய்களுக்கு, சித்த மருத்துவத்தில் எம்மாதிரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை மக்களுக்கு எந்த அளவிற்குப் பயன்பட்டுள்ளது?: சித்த மருத்துவத்தில் சித்தர்கள் 4 ஆயிரத்து 448 நோய்களைப் பற்றிக் கூறியுள்ளனர். அந்த நோய்கள் அனைத்தும் நூல்களில் இடம் பெற்று இருக்கின்றனவா என்பது குறித்துத் தெரியவில்லை. அவ்வளவு நோய்களைச் சித்தர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக டெங்கு காய்ச்சல் நேரத்தில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு பொதுமக்களுக்கு மிகவும் பலனை தந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். பப்பாளி இலைச்சாறு சாப்பிடும் போது ரத்தத்தில் தட்டனுக்கள் அதிகப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
இதேப்போல் பெருந்தொற்றுக் கரோனா காலத்தில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருந்தது. இதனைக் கிளினிக் ஆய்வு மூலமாக கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் பரிசோதனை செய்து நிருப்பித்துள்ளோம். சித்தா, ஆயுர்வேத மருந்துகள் பெருந்தொற்று காலத்திலும் மற்றும் புதிய புதிய நோய்கள் வரும் காலத்திலும் மக்களுக்குப் பக்க விளைவு இல்லாத நல்ல பயனை கொடுத்துள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.
சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறதா?: சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு சித்தா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகப் புதிதாக தேவையான நவீன இயந்திரங்களைக் கொடுத்துள்ளனர். அந்த இயந்திரங்களைப் பயன்படுத்திச் சிறப்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மருந்து பரிசோதனை ஆய்வகம் ஒன்றும் அமைக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வெளியில் விற்கப்படும் மருந்துகள் சரியான தரத்தில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மருந்து பரிசோதனை நிலையத்தில் தேவையான இயந்திரங்கள் நிறுவப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. நிலவேம்பு குடிநீர், வைரஸ் காய்ச்சலுக்கு எந்த வித பக்க விளைவும் இல்லாமல் குணப்படுத்தும் என்பதையும், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கபசுர குடிநீர் பயனுள்ளதாக இருந்தது என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளோம்.
மூலிகைகள் மற்றும் மருந்து தயாரிப்புக் குறித்துப் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு: பதிவு பெற்ற சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள், அவர்களின் கிளினிக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு அவர்கள் தயார் செய்த மருந்துகளைத் தாராளமாகக் கொடுக்கலாம். அதற்கு அவர்கள் யாரிடமும் எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை. அதே நேரம் ஒரு மருந்தை செய்து வணிகப்படுத்துவதற்கோ, மார்க்கெட்டில் விற்பதற்கோ, விளம்பரப்படுத்துவதற்கோ மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலகத்தில் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்.
அதேப்போல் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளைப் பற்றிப் பதிவு பெறாதவர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. குறிப்பிட்ட மூலிகைப்பற்றி உதாரணத்திற்கு உடல் பருமன், இதயம் போன்றவற்றிற்கு வலு சேர்க்கும் என்று கூறுவது சட்டப்படி தவறான ஒன்று. அதுபோன்று கூறுவதை மக்களும் நம்பக் கூடாது. மக்கள் அப்படிப் பேசுவதைக் கேட்க நேர்ந்தால் அருகில் உள்ள பதிவுபெற்ற சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் அழகிற்குச் சித்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்: சித்த மருத்துவத்தில் பல இருக்கின்றன. குறிப்பாக வெயில் காலத்தில் நெற்றியில் கருநிறமாகத் தோன்றும். சூரிய ஒளியில் வரக்கூடிய கதிர்கள் அந்த இடத்தில் மெலனின் பிக்மன்சை அதிகப்படுத்திக் கருப்பு நிறாமாக மாற்றும். அதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் 100 மில்லி தேங்காய் எண்ணெயில், கால் கிராம்(1/4) குங்குமப்பூ காய்ச்சி மேலுக்குத் தேய்த்து விட்டு வெளியில் நடந்து செல்லும் போது தோலில் அது போன்ற கருப்பு நிறம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மேலும் குங்குமாதி தைலம் போன்ற அழகுகென்று பல சித்த மருந்துகள் உள்ளன. அந்த மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவர்களின் தோளில் உள்ள கருப்பு நிறங்கள் மாறும். அதே நேரத்தில் இயல்பாகப் பிறவியிலேயே குறிப்பிட்ட நிறம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அந்த நிறத்தை கூட்டவோ குறைக்கவோ முடியாது.
சித்த மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளை வீட்டில் வளர்ப்பது சாத்தியமாகுமா?: பொதுவாக வீட்டுக் கொல்லையில் துளசி, தூதுவளை, ஆடாதொடை, கற்பூரவள்ளி, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி போன்ற மூலிகைகளை வளர்ப்பது மிகவும் சிறந்தது. பொன்னாங்கண்ணி கீரையை 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கண் சார்ந்த நோய்கள் தீரும். கரிசலாங்கண்ணிக் கீரை இளநரையை போக்கும். தூதுவளை எலும்புக்கு மிகச்சிறந்த மருந்தாகும். சளி போன்ற நோய்கள் குறைக்கும். துளசி இலையைப் போட்டத் தண்ணீரைக் குடித்தால் அது உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.
எலுமிச்சை பழம் தினசரி சாப்பிட்டு வரும்போது சிட்ரிக் அமிலம் உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முருங்கைக்கீரை சூப்பு அல்லது கீரை சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக்கு நல்லது. மேலும் தேவையான இரும்புச்சத்து நன்றாகக் கிடைக்கும். கருவேப்பிலை சாதம் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் மாறுவதுடன், உடம்புக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இது போன்ற மூலிகைகளை நாம் நம்முடைய வீட்டுக்குள்ளே அவசியம் வைக்க வேண்டும்.
எந்தெந்த வகையிலான சித்த மருத்துவம் நிறைந்தச் செடிகளை வீட்டில் வளர்க்கலாம்?
வீட்டில் கருநொச்சி வளர்க்கலாம். தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் போன்ற நேரங்களில் நொச்சி இலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை வைத்து வேது பிடித்தால் தலைவலி நீங்கும். வேப்பம்பூவை பொடியாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும். இது போன்ற மூலிகைச்செடிகளை வீட்டின் அருகில் வைத்துக் கொள்ளலாம். இதே நேரம் விஷத்தன்மை உள்ள அரளி, எட்டி போன்ற மரங்கள் அழகிற்காக இருந்தாலும், இதனை ஒருபோதும் நாம் மருத்துவ ரீதியாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.
வீட்டு வைத்தியம் பார்ப்பது போல் மூலிகை தாவரங்களைப் பயன்படுத்தலாமா?: சமீபகாலமாக வீட்டு வைத்தியம் என்ற பெயரில் யூடியூபில் அதிகம் பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது போன்ற ஆலோசனைகளைப் பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்றக் கூடாது. பொதுமக்கள் சித்தா, யுனானி, ஆயுர்வேதா சம்பந்தப்பட்ட எந்த ஆலோசனையாக இருந்தாலும் அருகில் உள்ள பதிவு பெற்ற சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்களைச் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை கேட்கலாம்.
அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனை கேட்டு தான் எந்த மருத்துவத்தையும் பின்பற்ற வேண்டும். ஒரு தனி மூலிகை என்றாலும் பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில் கேட்பதை கட்டாயம் அவர்கள் பயன்படுத்தக் கூடாது.
பாட்டி வைத்திய முறைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்? பாட்டி வைத்தியம் என்பது நமது வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டி வைத்தியம். வயிற்றுப் பருமன் என்றால் சீரகம், கொத்தமல்லி போட்டுத் தண்ணீர் குடிப்பது, வயிறு பருமனாக இருந்தால் ஓமத்தை கொதிக்க வைத்துத் தண்ணீர் குடிப்பது போன்ற பல இருக்கின்றன. ஆரோக்கியம் என்பது சமையலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. மஞ்சளில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவுள்ளது. கோவிட் காலத்தில் நாம் பாலில் மஞ்சள், மிளகு கலந்தும் சாப்பிட்டோம். இது போன்ற ஆலோசனைகளைப் பின்பற்றுவதில் தவறு கிடையாது.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவம் குறித்துத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பல்வேறு முன்னேற்பாடுகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அரசு மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவர்கள் இருக்க வேண்டுமென செயல்பட்டு வருகிறார். எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும். எல்லா நோய்களுக்கும் சித்த, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் வழிகள் உள்ளன. எனவே பதிவுபெற்ற மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!