தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலான பின்பு, சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பேரில் ஒருவரான பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையை வாசித்துள்ளார்.
இது யாருக்கும் பத்தாத பட்ஜெட். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டை பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் வாசித்துள்ளார். இதில் கூட பாஜக அரசைதான் அதிமுக அரசு பின்பற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரிக்கிறது. ஒவ்வொருவரின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனாக சுமத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் சுமை, தற்போது நான்கு லட்சத்துக்கும் மேல் உள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி, தொலைநோக்குத் திட்டம், என எதுவும் இல்லை. முதலமைச்சர், வேலுமணி, தங்கமணி ஆகியோர் துறைகளுக்கு மட்டும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவு நல்லதாகக் கூட இருக்கலாம். அமைச்சர் ஜெயக்குமார் டெல்லிக்குச் சென்று ஒரு ரகசிய கடிதம் வழங்கினார். அதில் என்ன இருக்கிறது என்பதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020: மூலதன செலவுக்காக சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு