சென்னை: தமிழ்நாட்டில் இரண்டாயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வு துறை அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை தேர்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவுட்சோர்சிங் முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களை தேர்வு செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் தேர்வு செய்து நியமனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.
![Staff at the amma Mini Clinic will not be permanent](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-amma-mini-cilinc-posting-script-7204807_10022021153703_1002f_01714_859.jpg)
அதனடிப்படையில் அந்தந்த மாவட்டத்திலுள்ள மினி கிளினிக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் ,மருத்துவமனை பணியாளர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டாயிரம் மருத்துவர்கள், இரண்டாயிரம் செவிலியர்கள், இரண்டாயிரம் மருத்துவமனைப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மருத்துவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 60 ஆயிரம் ரூபாய், செவிலியர்களுக்கு மாத தொகுப்பூதியம் 14 ஆயிரம் ரூபாய், மருத்துவமனை பணியாளர்களுக்கு மாற்று தொகுப்பூதியம் ஆறாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படஉள்ளது. இந்தப் பணிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில்,
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேர்வதற்கான சுய விருப்பு கடிதம் அளிக்க வேண்டும் என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. மேலும் இந்தப் பணியானது ஓராண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
![Staff at the amma Mini Clinic will not be permanent](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-amma-mini-cilinc-posting-script-7204807_10022021153703_1002f_01714_859.jpg)
சென்னையை பொறுத்தவரை சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்களை தேர்வு செய்கிறது. மாவட்டங்களில் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தேர்வு செய்து, பணி நியமன ஆணைகளை வழங்குவார்கள்.