சென்னை: தொடர் மழையால் தாம்பரம் அருகே உள்ள எஸ்எஸ்எம் நகர் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு மழை நீரால் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தாம்பரம் அடுத்த சதானந்தபுரம் எஸ்எஸ்எம் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடியிருப்பைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியே தீவு போல் காட்சி அளிக்கிறது.
இதனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குடியிருப்பைச் சுற்றி உள்ள சாலைகளில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு குடியிருப்பைச் சுற்றியுள்ள மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என நெடுங்குன்றம் ஊராட்சி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இது வரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பள்ளி செல்லும் குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி, முறையான வடிகால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கனமழை பெய்யும்போது பக்கத்து காலி மனையில் உள்ள மழைநீர் வடிவதற்கான கால்வாய்கள் இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் ஆறு போல் ஓடுவதோடு, குடியிருப்பைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தீவாக மாறி விடுகிறது என மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், வீட்டிற்கு வந்த உறவினர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் மழை நீர் சூழ்ந்து கொண்டதைக் கண்டு, அச்சத்தில் கைக்குழந்தைகளுடன் வெளியேறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மழை வந்தாலே இதே நிலைதான், ஊராட்சி அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை என குடியிருப்புவாசிகள் புலம்பினர்.