சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா நாளை தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். சசிகலா வருகை அதிமுக கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக அமைச்சர்கள் சசிகலா மீது புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் துறை சார்பாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்தால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சசிகலா வரவேற்பு நிகழ்விற்கு காவல் துறை அனுமதி வாங்கியிருந்தாலும் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை.
சென்னை தி.நகரில் உள்ள இளவரிசியின் வீட்டில் சசிகலா தங்க உள்ளார். இதற்கு முன்னதாக அவர் கணவர் நடராஜன் மறைவின்போதும் அங்குதான் தங்கியிருந்தார். சசிகலா பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வர உள்ள இவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக சென்னையில் மட்டும் 32 இடங்களில் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
சென்னை வரும் சசிகலா முதலில் ராமபுரத்தில் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என்றும் அதேபோல் தி.நகர் இல்லம் முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை செல்வார் என்றும் கூறப்படுகின்றது.
சசிகலா சென்னை வருகைக்கு பின்னர் அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் வாய்ப்புள்ளது. நேற்று அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா -அதிமுக இணைப்பு குறித்த கருத்துகள் கேட்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிறை செல்வதற்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்த சசிகலா, என்ன சபதம் எடுத்தார் என்பதை தனது செயல்பாட்டு மூலம் தெரிவிப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.