சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் தாயார் சன்னதியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் கோயில் வளாகத்தில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு தலைவர் சேகர் கூறியதாவது, “ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசனம் செய்யலாம்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் நேரடியாக தரிசனம் செய்ய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில், குடிநீர் மற்றும் மோர் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியின்போது 60 ஆயிரம் பக்தர்கள் வருகை புரிந்தனர். எனவே, புத்தாண்டுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் லட்டுகள் வரவழைக்கப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.
தாயார் சன்னதியிலும், பொதுமக்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்களுக்கு 5,000 லட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 5,000 லட்டுகள் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு வருகையை முன்னிட்டு, சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்கள் தங்கி சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்ப பக்கத்தில் உள்ள இடத்திலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மாஸ்டர் பிளான் நிறைவு - ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்!