கரோனா தொற்று அறிகுறிகளுடன் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கோவிட் - 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, நேற்று (ஆக. 13) இரவு அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, வென்டிலேட்டர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியான அறிக்கையில், "பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. மருத்துவர் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ஆறு தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.