சென்னை: தமிழ் இதழியலின் முன்னோடியும், 'தமிழர் தந்தை' என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாம் தமிழர்கள் என்று அனைத்து தமிழர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்த பெருமைக்குரியவர் சி.ப.ஆதித்தனார் என்பதை உலகம் நன்கு அறியும். நாமெல்லாம் தமிழர்கள் என்று அவரது புகழை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள். பத்திரிக்கை படிக்க வேண்டிய ஆர்வத்தை ஆதித்தனார் உருவாக்கினார் என்பதுதான் வரலாறு.
உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும் அவரது புகழை பறைசாற்ற வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் தலைவர்கள் ஆற்றிய நற்பணிகளுக்கு புகழ் சேர்க்கும் விதமாக திருவுருவ சிலை வைக்கப்படுவது பண்பாடாக இருந்து வருகிறது. அதன்படி அண்ணா சிலை உள்ளது. சில விஷமிகள் அதை களங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி