சென்னை: பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) நிறுவனத்துடன் இணைந்து தனது யுனிக் புரொடக்சன் (Uniq Production ) மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும், வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “2000-ல் என்னுடைய பயணம் தமிழில் தொடங்கியது.
சிவப்பதிகாரம் படத்தில் மன்னார்குடி பளபளக்க என்கிற பாடலுக்கு ஆடிவிட்டு வந்தபோது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. ஆனால் அதுதான் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என அப்போது தெரியவில்லை. அதன்பிறகு நான்கு வருடங்கள் கழித்து தான் அதன் பாதிப்பை உணர்ந்தேன். என்னால் திருமணம் கூட பண்ண முடியவில்லை. என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே தான் பார்க்கிறார்கள்.கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை மாற்றுவதற்காக சின்னத்திரை சீரியல்களில் அம்மா வேடங்களில் நடித்தேன். ஆனாலும் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றார்.
2017ல் டைரக்சன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.அதன் பிறகு தான் எனக்கென ஒரு டைரக்ஷன் குழுவை உருவாக்கினேன். எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை குறித்து யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துக்களும் வரவில்லை.
இதை எழுதி முடித்ததும் இதை படமாக்க யாரை அணுகுவது என நினைத்த சமயத்தில் தான் எனக்கு ஒரு பெரிய தூணாக ஷார்ட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கை கொடுத்தது. இத்தனை வருடங்களில் நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அத்தனை பட இயக்குநர்களுக்கும் இந்த வெப்சீரிஸை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
இந்த வெப்சீரிஸை பல சீசன்களாக எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறேன்.ஆனால் இதில் 99 சதவீதம் உண்மையைத்தான் பேசப்போகிறேன். அதற்காக நீங்கள் அதற்காக என்னை கழுவி ஊற்றினாலும் பரவாயில்லை. இதில் நிஜமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் பெயர்களை மாற்றி இருக்கிறேன்.
இந்த படத்தில் சனா என்கிற என்னுடைய கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்ட தோற்றங்களில் நடிப்பதற்காக ஒவ்வொரு வயதிலும் என்னைப் போன்ற தோற்றம் போன்ற ஐந்து சனாக்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறேன். இந்த கதை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும். ஓடிடியில் இதை சுதந்திரமாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நானே சான்றிதழ் கொடுப்பது என்றால் யு/ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு இந்த தொடர் இருக்கும்.
இந்த வெப்சீரிஸ் வெளியாகும்போது ‘தி பிகினிங் ஆப் எண்ட்’ (The Begining Of End) என ஒரு டேக்லைனை சேர்க்க இருக்கிறேன். அதாவது ஒரு கவர்ச்சி நடிகையின் முடிவு என்பதுதான் அதற்கு அர்த்தம். பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. சென்னை மற்றும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. மலையாளத்திலும் எனக்கு வரவேற்பு இருப்பதால் அங்கே மொழிமாற்றம் செய்து வெளியிடும் எண்ணமும் இருக்கிறது.
இந்த வெப்சீரிஸில் கதாநாயகனாக முகேஷ் கண்ணா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக கபில் ராய் மற்றும் கலை இயக்குனராக பாலா ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர் ஒருவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த உள்ளேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் 52வது தொடக்க விழா; ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்!