தூத்துக்குடி: அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் (39), இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (39). இவர்கள் இருவரும் குடும்ப தகராறு காரணமாக 5 வருடத்திற்கு முன்பே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் திருமணம் முடிந்து சென்னையில் உள்ளார். மகன் (17) தந்தையுடன் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், சுப்புலட்சுமி தூத்துக்குடி டிஎம்பி காலனியை சேர்ந்த அவரது உறவினரான ஆவுடையப்பனுக்குத் தம்பி முறை உள்ள உறவினரான சுடலைமணி என்பவருடன் திருமணம் மீறிய உறவிலிருந்து வந்துள்ளார். இதன் காரணமாக, ஆவுடையப்பனின் மகன் கணேஷ் என்பவர் அடிக்கடி வீட்டிலும், பார்க்கும் இடங்களிலெல்லாம் சுடலைமணியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், வாட்ஸ்அப் தளத்திலும், தகாத வார்த்தைகளாலும் சுடலைமணியை கணேஷ் திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுடலைமணி வீட்டிற்குச் சென்ற கணேஷ் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து தகராறும், செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்து கணேஷை ஓட, ஓட விரட்டி வெட்டி விட்டு சுடலைமணி தலைமறைவானார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அக்கம் பக்கத்தினர் கணேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பைக் திருட்டில் இது புது ரூட்டு.. 15 பைக்களுடன் சிக்கிய பலே திடுடன்!
இதைத் தொடர்ந்து, ஆவுடையப்பனின் உறவினர்கள் இன்று மதியம் உடனடியாக சுடலைமணி மற்றும் தாய் சுப்புலட்சுமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று உடலை வாங்க மறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு சுடலைமணி மற்றொரு உறவினரான முருகன் என்பவர் மீது பொய் வழக்கு அளித்து முருகன் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காரில் கிடந்த குழந்தைகள் சடலம்! காணாமல் போனவர்கள் சடலமாக கண்டெடுப்பு!