சென்னை: கே.கே. நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு உதவிகள் செய்யும் வேலை செய்துவருகிறார். இவரது கணவர் தேசமுத்து பெயிண்டிங் வேலை செய்துவந்தார். இத்தம்பதியினர் தங்களது நான்கு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 9) காலை தேசமுத்து படுக்கையில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த முனியம்மாள், அவரை கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதிசெய்து, அவரின் மரணத்தில் சந்தேகமடைந்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தந்தையைக் கொன்ற மகன்
தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகர் காவல் துறையினர், தேசமுத்துவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரது இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், நேற்று முந்தினம் (பிப்ரவரி 8) இரவு குடிபோதையில் தேசமுத்துவுக்கும், அவரது மகன் விஜய்க்கு தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜையை, காவல் நிலையம் அழைத்துச் சென்று, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, தேசமுத்து குடிபோதையில் தினமும் முனியம்மாவை தகாத முறையில் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், சம்பவத்தன்று இரவும் அதேபோல் தகாத வார்தைகளால் திட்டியதாகவும், அதனால் அனைவரும் தூங்கிய பின்பு, செல்போன் சார்ஜர் வயரால் தேசமுத்துவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாகவும் விஜய் வாக்குமூலம் அளித்ததாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து முனியம்மாளிடம் புகாரைப் பெற்ற காவல் துறையினர், விஜய் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைதுசெய்து, மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவ மாணவி தற்கொலைக்கல்லூரி - காவல்துறை விசாரணை