சென்னை: ஜாபர்கான்பேட்டை பச்சையம்மன் தெருவை சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சந்தோஷ். இவர் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி மாலை, கல்லூரிக்கு சென்ற தனது சகோதரியை அழைத்து வருவதற்காக, ஜான் கென்னடி தெரு வழியாக சென்றுள்ளார்.
பின்னர் சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்துள்ளார். அப்போது அவ்வழையே சென்ற இறுதி ஊர்வலத்தில், தடைசெய்யப்பட்ட நாட்டு வெடியை வெடித்து சென்றுள்ளனர். அது சமயம் நாட்டு வெடியிலிருந்த கல் ஒன்று சிறுவனின் இடது கண்ணில் பலமாக தாக்கியுள்ளது.
பறிபோன பார்வை-காவல் நிலையத்தில் புகார்
இதனால் வலியில் துடித்த சிறுவனை அருகில் இருந்தவர்கள், சிறுவனை மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சந்தோஷை பரிசோதித்த மருத்துவர், சிறுவனின் பார்வை பறிபோய்விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் சகோதரி புவனேஷ்வரி தனது சகோதரர் கண் பறிபோனதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜாபர்கான்பேட்டை ஜான்கென்னடி தெருவை சேர்ந்த விமலா (41) என்பவரின் இறுதி ஊர்வலத்தில், சண்முக வேல் என்பவர் நாட்டுவெடி வெடித்த போது அதிலிருந்து சிதறிய கல் சிறுவன் கண்ணில் பட்டு பார்வை பறிபோனது தெரியவந்தது.
மூன்று பேர் கைது
இதையடுத்து நாட்டு வெடி வாங்கிய ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த குணசேகரன் (24), பட்டாசு வெடித்து விபத்து ஏற்படுத்திய சண்முகவேல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்ற செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது வெடிபொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் சகோதரி புவனேஷ்வரி கூறுகையில், “தனது சகோதரர் தன்னை கல்லூரியிலிருந்து அழைக்க வரும்போது, அவ்வழியே சென்ற இறுதி ஊர்வலத்தில் சிலர் நாட்டு வெடி வெடித்துள்ளனர். அதிலிருந்த கல் தந்து சகோதரரின் இடது கண்ணில் பட்டதால், பார்வை பறிபோனது.
இவ்விபத்துக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனது சகோதரருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரது பார்வையை மீட்டு தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய ஆடு மேய்ப்பாளர்கள் - பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு