சென்னை: தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை பாதிப்புகள் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிக பட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் 96 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. கடலோர பகுதிகளில் அதிக அளவு மழைப் பொழிவு இருக்கிறது. தூத்துக்குடியில் தேங்கும் மழை நீர் வடிய தாமதமாகலாம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் 84 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 425 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 7 ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளைப் பொருத்தவரை தூத்துக்குடியின் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
மீட்புப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் கடற்படையின் உதவி கேட்டுள்ளோம். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சூலூர் விமானப்படைத் தளம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வெள்ளம் குறித்த புகார் மற்றும் மீட்பு உதவிகளுக்காக 1070 என்கிற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றும், இதுவரை 3 ஆயிரத்து 863 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 3 ஆயிரத்து 732 புகார்கள் குறித்து விசாரித்து தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், தென் மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவைகள் குறித்துப் பேசும் போது, சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும். அவை கோவில்பட்டி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுழல் இயல்பு நிலைக்குத் திரும்பினால், பேருந்துகள் அந்தந்த ஊர்கள் வரை அனுப்பப்படும். மேலும், உள் மாவட்டங்களில் பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதிகம் தேவைப்படும் பகுதிகளுக்கு மட்டும் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாகக் கோவில்பட்டி, விருதுநகர் போன்ற ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் உள்ள பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்களுக்கு தங்க இடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லையை மிரட்டும் கனமழை.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மாநகரம்.. அத்தியாவசிய பொருட்கள் மதுரையிலிருந்து வரவழைக்க ஏற்பாடு..