சென்னை: தமிழக காவல்துறையின் தலைமை டிஜிபியாக சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற 30ஆம் தேதியுடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தற்போது தமிழக டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சங்கர் ஜிவால்: 1990ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவாலின் சொந்த மாநிலம் உத்தரகாண்ட். பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், அதில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் பேசும் புலமை பெற்றவர்.
தனது இன்ஜினியரிங் படிப்பு முடிந்ததும், சங்கர் ஜிவால் செய்ல் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா) மற்றும் பெல் (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) நிறுவனத்திலும் சிறிது காலம் இன்ஜினியராகப் பணிபுரிந்தவர். அதன் பின்பு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
சேலம் எஸ்.பி., மதுரை எஸ்.பி., மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவான மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப்பிரிவில் டிஐஜி மற்றும் ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கியப் பதவிகளில் சங்கர் ஜிவால் பணியாற்றியவர். அயல் பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், பின்பு தமிழ்நாட்டிற்கு வந்து அதிரடிப்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை குடியரசுத்தலைவர் பதக்கமும் பெற்றவர்.
ஏடிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், சென்னையின் 108ஆவது காவல் ஆணையராக கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். அதன் பின்னர் டிஜிபியாக பதவி உயர்வுபெற்ற சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியைத் தொடர்ந்தார்.
சென்னை காவல் ஆணையராக டிஜிபி சங்கர் ஜிவால் இருந்தபோது, சென்னையில் குற்றங்களைக் குறைக்கவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் 131 திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். குறிப்பாக முதல் சிறார் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் பறவை திட்டம், டிரைவ் அகயின்ஸ்ட் டிரக்ஸ் திட்டம், டேர் (dare), சாலை விபத்துகள் தடுக்கும் திட்டம், ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ், சைபர் லேப், சிற்பி, ஆனந்தம், ஒருங்கிணைந்த சிசிடிவி கட்டுப்பாட்டு அறை போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் ஆகியவைகளை சிறப்பான முறையில் அமல்படுத்தியதில் சென்னை காவல் துறைக்கு பாராட்டை பெற்றுத் தந்தார். இவரது காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தபோது பாதுகாப்புப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக அனைவராலும் பாராட்டு கிடைத்தது.
அதேநேரத்தில், இவரது பதவிக் காலத்தில் பட்டப்பகலில் பெட் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், தலைமைச் செயலக காலனி மற்றும் கொடுங்கையூரில் லாக்கப் மரணங்கள் போன்ற சில சர்ச்சைக்குரிய சம்பவங்களும் அரங்கேறின.
இதையும் படிங்க: Uniform Civil Code: பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!