சென்னை: கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) பகுதியில் உள்ள கடற்கரையில் எச்சரிக்கையை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கானத்தூர் உதவி ஆணையர் வெங்கடேசன் இன்று (ஜன.3) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் குப்பம், நைனார் குப்பம், கானத்தூர் குப்பம், கரிகாட்டு குப்பம் ஆகிய பகுதிகளை ஒட்டிய கடற்கரையில் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கடலின் ஆழம் தெரியாமல் குளிக்கும் போது கடல் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக, கடந்த 29ஆம் தேதி மாலை ஸ்நேகா கார்டன் பகுதியில் உள்ள கடற்கரையில் 9 பேர் குளிக்கச் சென்றதில், 5 பேர் கடல் அலையில் சிக்கி மூழ்கினர். அதன் பின்னர், கானத்தூர், கரிகாட்டு பகுதி மீனவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இரண்டு மணிநேரம் போராடி 18 வயது பெண்ணை மட்டும் உயிருடன் மீட்டனர். அவருடன் சிக்கிய மற்ற நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல், புத்தாண்டு (ஜன.1) அன்று அதிகாலை 5 மணியளவில் விஜிபி அவுட் கடற்கரையில் குளிக்கும் போது இருவர் கடல் அலைகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை ஆகிய பகுதிகளில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
அந்த வகையில், கடந்த 28ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை, 10 நபர் சென்னை ஈசிஆர் கடற்கரை பகுதிகளில் குளிக்கச் சென்று மரணமடைந்துள்ளனர். இதனால் கானத்தூர் காவல்துறை சார்பில் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளியூரில் இருந்து வரும் பொதுமக்களுக்கு கடலின் ஆழம் மற்றும் கடலின் சுழற்சி தெரியாமல் குளிக்கும் போது, கடல் அலைகளில் சிக்கி உயிரிழப்பதால், அப்பகுதியில் இருக்கும் ரிசார்ட் உரிமையாளர்கள், ரிசார்ட்களில் (Resorts) தங்குபவர்களை கடலில் குளிக்க அனுமதிக்கக் கூடாது.
மேலும், கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றிய மீனவர்களை கானத்தூர் காவல்துறை சார்பில் அழைத்து பாரட்டியதோடு, அவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அப்பகுதியில் இருக்கும் மீன கிராமங்களில் இருக்கும் மக்களும் காவலர்களுக்கு உதவி புரியும் வகையில் செயல்பட வேண்டும்.
தொடர்ந்து ஊர்த் தலைவர், மீனவர்களை அழைத்து சுற்றுலா வரும் பயணிகளை மீனவ படகுகளில் ஏறிச்செல்வதை நிறுத்த வேண்டி, அவர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி, அறிவுரை வழங்கப்படுகிறது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட கடற்கரை பகுதியில், எச்சரிக்கையை மீறி குளிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தாய் மடியே சுகம்'.. தாயை பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ந்த அழகிய தருணம்!