சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.
இதனிடையே, கைதானபோது தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் செப்டம்பர் 20ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 7வது முறையாக நீட்டித்த அமர்வு நீதிமன்றம், அக்டோபர் 13ஆம் தேதி வரை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நேற்றைய சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில், சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். இதனையடுத்து, இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி 7 மணி நேர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!