சென்னை: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி, எம்.பி., எம்எல்ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டது என்பதால், இது தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் அருண், பரணிக்குமார் ஆகியோர் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் முறையிட்டனர். அதற்கு நீதிபதி, "இது தொடர்பாகச் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்" என்றார்.
அதனைத்தொடர்ந்து, மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதில் அமலாக்கத் துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான, ‘சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்’ மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் விசாரணையை நடத்தும், ‘சிறப்பு நீதிமன்றம்’ ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார். அதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில், இந்த முறையீட்டு எப்படி ஏற்பது என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “மாற்று அமர்வான நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே குமரேஷ்பாபு ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கவில்லை என்பதால் தான், இந்த அமர்வில் முறையிடுவதாகவும், நிர்வாக ரீதியான உத்தரவைப் பிறப்பித்தால் கூட போதுமானது” என்று தெரிவித்தார்.
மேலும், ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்? என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்று கூறிய நீதிபதி எம்.சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு அறிவுறுத்தினார். ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்விலேயே நாளை (செப்டம்பர் 01) முறையிட உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'I.N.D.I.A' கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் மு.க.ஸ்டாலின்.. மும்பையில் நடப்பது என்ன?