சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அது மட்டுமில்லாமல், இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி இவ்வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதைத்தொடர்ந்து, வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரைத்தார்.
பின்னர் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில், “அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். தனி கூட்டம் நடத்தக்கூடாது.
பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டும்.
இருவரும் இணைந்து கூட்டத்தை கூட்டுவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்” என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வழியனுப்ப ஓபிஎஸ்... வரவேற்புக்கு ஈபிஎஸ்... மோடியின் 'ஆசிபெற்றவர்' யார்?