சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில், ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து நிலையம் சுமார் 395.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, துறை அதிகாரிகளுடன் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பணிகள் எவ்வளவு விரைவாக முடிக்கப்படும் என ஒப்பந்ததாரர்களுடனும், அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்தார்.
சாலைப் பணிகள் குறித்த காலத்தில் முடிக்காத ஒப்பந்ததாரர்களை துறை செயலாளர் அபூர்வா கண்டித்தார். இதன் பின்னர், ஜிஎஸ்டி சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், 3 அணுகு சாலைகளை அமைக்கும் பணி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வளைவு அமைக்கின்ற பணி, பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் அமைக்க வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
அந்த வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 17 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள மழைநீர் கால்வாய், வெளிவட்ட சாலை - முடிச்சூர் ரோட்டில் அமைய இருக்கின்ற 29 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆம்னி பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள காவல் நிலையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டேன்.
இதையும் படிங்க: “எங்கள் தோழில் சவாரி செய்த கட்சிதான் பாஜக” - அதிமுக அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா
மேலும், ஐயன்சேரி மற்றும் மீனாட்சிபுரம் சாலை விரிவாக்கப் பணிகள் 7.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. போலீஸ் அகாடமி சாலை - கூடுவாஞ்சேரி - ஊனமாஞ்சேரி பகுதியில் 6.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணி நடைபெற்று வருகிறது. கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம் மற்றும் ஆதனூர் சாலையில் 2.90 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்டேன்.
2013-இல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், 2019இல் துவங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. திமுக அரசு பொறுப்பேற்று கொண்டதிலிருந்து 60 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணியானது அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் திட்டமிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பகுதிகளிலும் பயணம் செய்ய இருக்கின்ற பயணிகளுக்கு தேவைப்படுகின்ற அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தியதால், சுமார் 70 கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக அமைந்த ஆட்சியின் பிறகுதான் திட்டமிடும் பணிகள் நடைபெற்றது.
திட்டமிடாமல் துவங்கப்பட்ட பணி என்பதாலே காலதாமதம் ஏற்பட்டது. இடையில் இயற்கைச் சீற்றம், பருவமழை உள்ளிட்டவற்றையும் சமாளித்து பணியாற்றி வருகிறோம். தினந்தோறும் துறை சார்ந்த அதிகாரிகள் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர் ஆய்வு மேற்கொண்டதன் விளைவாகத்தான் இன்று இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரும் இந்த பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அவருடைய நேரடி கண்காணிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அக்டோபருக்குள் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த வடிகால் அமைக்கும் பணியானது ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, போர்க்கால அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரித்து நடைபெற்று வருகிறது. அதிவிரைவாக பணிகளை முடிக்க அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி மாதமே பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் தேதி தள்ளிச் சென்று வருவது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு; ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்!