பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சமீபத்தில் டிடிவி தினகரனை விமர்சித்து, '1998 மற்றும் 2004-இல் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்தது. ஆனால், ஜெயலலிதா திமுகவுடன் என்றாவது கைகோர்த்தாரா. இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிற்கு துரோகம் செய்கிறார் தினகரன். எஸ்.டி.பி.ஐ உடன் கூட்டணி வைத்து பயங்கரவாதத்தை வளர்க்கிறார். அமமுக ஒரு அழிவுசக்தி’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வகுப்புவாத வன்முறைகள் மூலம் நாடு முழுவதும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அதன்மூலம் பாஜக அரசியல் ஆதாயம் அடைந்துவருகிறது. அதிலும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் அமமுக மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் ஆதரவை கண்டு மிரண்டு போயுள்ளதாகவே தெரிகிறது.மத்தியில் நடைபெற்றுவரும் பாசிச பாஜக அரசு மற்றும் அதன் அடிவருடியாக மாறிவிட்ட அதிமுக அரசுக்கு முடிவுகட்டும் வகையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவளித்தனர். ஆளும் அரசுகளின் பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ள அமமுகவை கண்டு ஆளும் அரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த அழிவு சக்தியாக பாஜகவும் அதன் சங்கப்பரிவார சக்திகளும் உள்ள நிலையில், வன்முறை பேச்சுக்கள் மூலம் மட்டுமே தன்னை அரசியலில் அடையாளப்படுத்திக் கொண்ட பாஜகவின் ஹெச்.ராஜா அமமுக குறித்தும் எஸ்.டி.பி.ஐ. குறித்தும் பேச என்ன தகுதி இருக்கிறது. மக்களிடம் வெறுப்பை விதைத்து கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜகவை தற்போது மக்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கியுள்ள நிலையில், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதையாக தனது அட்மின் மூலம் ஹெச்.ராஜா போன்றோர் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பிவருவதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்தகைய தீய அழிவு சக்திகள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.