சட்டப் பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் செய்யாறு தூசி. மோகன் பேசுகையில், “எனது தொகுதிகுட்பட்ட அனகாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் என கெரோனா வைரஸ் போல வேகமாக செயல்படும் பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.
‘கரோனா போல் செயல்படும் அமைச்சர்’ - எம்.எல்.ஏ பேச்சால் பேரவையில் சிரிப்பலை! இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நுழையாத வரலாற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படைத்துள்ளார். கஜா புயலின் போது அதனை சமாளித்து நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டது போல எந்த வகையான இயற்கை, செயற்கை பேரிடர் வந்தாலும் அதன் ஆபத்திலிருந்து மக்களை காக்கும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கும். மாணவர்கள் மீது தூசிக்கூட படாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என உறுப்பினர் விரும்புகிறார். அந்த வகையில் உறுப்பினர் குறிப்பிட்டுள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக விரைவில் தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும்” என கூறினார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.