சென்னை: உச்ச நீதிமன்ற கொலிஜியம் செப்டம்பர் முதல் தேதியில் கூடியது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப முடிவுசெய்யப்பட்டது. நீதிபதி பணிக்கான தங்களது தகுதிகள், அனுபவங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஏற்கனவே பல்வேறு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் கொடுத்திருந்தனர்.
அவர்களில், பெண் வழக்கறிஞரான சுந்தரம் ஸ்ரீமதி, ஆண் வழக்கறிஞர்கள் டி. பாரத சக்ரவர்த்தி, ஆர். விஜயகுமார, முகமது ஷாபிக் ஆகிய நான்கு பேரை, நீதிபதி பணிக்குத் தேர்வுசெய்து பரிந்துரைத்து, பட்டியலை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மொத்தமாக 75 நீதிபதிகள் பணியமர்த்தலாம். ஆனால், சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எம். சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்து, காலியிடங்கள் 19 ஆக உயர்ந்துள்ளது.
குடியரசுத் தலைவர், இவர்கள் நால்வருக்கும் நீதிபதிகளாக்க ஒப்புதல் வழங்கும்பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை, 60ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த தமிழர்!