சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்பட தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர, தேமுதிக வேட்பாளர் ஆன்ந்த்க்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் பிரச்சார களத்தில் உள்ளனர்.
இதனிடையே இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு தேர்தல் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 61.70 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியான தன்னிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சி-விஜில் (commission-vigil) என்ற மொபைல் செயலியில் இதுவரை 1 புகார் மட்டுமே வந்துள்ளதாக கூறினார்.
அதேநேரம் சமூக வலைதளங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால், அவ்வாறு சமூக வலைதளங்களில் இருப்பதாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை என கூறினார்.
இதையும் படிங்க: "அதிமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதற்கு, திமுகவின் குறைகளே காரணம்" ஏ.சி.சண்முகம்