சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமன். இவரது மாமனார் பாஸ்கரை, செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர காவல்துறையினர் அதிரடியாக இன்று (ஜன.8) கைது செய்தனர். செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் பாஸ்கர் மற்றும் அவரது தம்பி சிட்டி ராஜா ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் பாஸ்கர் மற்றும் அவரது தம்பி சிட்டி ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிட்டி ராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தம்பி இறந்த பின்பு பாஸ்கர் தொடர்ந்து செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
செம்மரக்கட்டை கடத்தலை மறைப்பதற்காக பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர்கள் 48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த விவகாரத்திலும் பாஸ்கரை தேடி வந்தனர். செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உள்பட 28 வழக்குகள் பாஸ்கர் மீது நிலுவையில் உள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் என்ற அடையாளத்தை வைத்து வழக்குகளிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்ட பாஸ்கர் என்று அடைமொழி வைத்து அழைக்கும் வகையில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் பாஸ்கருக்கு தொடர்பு இருப்பதால் தான், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் திருமணத்திற்கு ஜெயலலிதா கலந்துகொள்ளாமல் தவிர்த்ததாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், 20 பேர் அடங்கிய ஆந்திர தனிப்படை காவல்துறையினர் அண்ணாநகரில் இருந்த பாஸ்கரை செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் அதிரடியாக இன்று(ஜன.7) கைது செய்து ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, கைதான பாஸ்கர் வீட்டிலும் மூன்று நாள்கள் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 51 மணி நேரம் தொடர்ந்து பாஸ்கரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு - உயர் நீதிமன்றத்தில் தகவல்