சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80) மூச்சுத்திணறல் காரணமாக நேற்று (ஜூலை 19) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 20) அதிகாலை சேலத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டார். சுமார் 12 மணியளவில் அவர் அப்போலோ மருத்துவமனை சென்றார்.
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்ற ஐந்து நிமிடங்களில் மதுசூதனனை காண சசிகலாவும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். இதன் காரணமாக இருவரும் நேரில் சந்தித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா மருத்துவமனைக்கு சென்றார்.
நேருக்கு நேர்
இருவரும் சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் தொற்றிக் கொண்டது. சசிகலாவின் கார் அப்போலோ மருத்துவமனையின் நுழைவுவாயிலில் வரிசையில் காத்திருக்க, வேகவேகமாக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
நுழைவு வாயிலும் வெளியேறும் வாயிலும் வெவ்வெறு திசையில் உள்ளதால் இருவரும் கடைசி வரை சந்திக்க முடியவில்லை. பழனிசாமி வெளியேறிய பின்னர் சசிகலாவின் கார் மருத்துவமனைக்குள் நுழைந்தது. இருவரும் தலா ஐந்து நிமிடங்கள் மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்ததாக தெரிகிறது.
சசிகலா பேட்டி
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவைத் தலைவர் மதுசூதனை சந்திக்க வந்தேன். மதுசூதனன் நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவரின் உறுவினரிடம் நலம் விசாரித்தேன், அவரையும் சந்தித்து பேசினேன்” என தெரிவித்தார்.
எடப்பாடியும், சசிகலாவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றதால் இருவரும் நேரில் சந்தித்தால் அந்த சந்திப்பு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், அப்போது ஏற்பட்ட பதற்றமான நிலையும் சுமார் 15 நிமிடங்கள் நீடித்த நிலையில், இறுதியில் சத்தமில்லாமல் முடிந்து போனது.
இதையும் படிங்க: 'இனியும் சும்மா இருக்க மாட்டேன்' - சசிகலாவின் நியூ ஆடியோ