'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் மறைந்த மருத்துவர் சேதுராமன். அதற்குப் பிறகு 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராகவும், திரையுலகினர் பலருக்குத் தோல் மருத்துவராகவும் இருந்துவந்தார்.
கடந்த மார்ச் 26ஆம் தேதி சென்னையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவரும், நடிகருமான சேதுராமன் காலமானார். அவருடைய மறைவு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மனைவியின் பெயர் உமையாள். இவர், சேதுராமனின் ஜி கிளினிக்களை கவனித்துவருகிறார். இந்நிலையில், மறைந்த மருத்துவர் சேதுராமனின் ஜி கிளினிக்கின் ஈசிஆர் கிளையை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சந்தானம் திறந்துவைத்தார்.
சருமம், கேசம் மற்றும் லேசர் சிகிச்சை ஜி மருத்துவமனை, முதன்முதலாக கடந்த 2016ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது. சென்னையில், ஏற்கெனவே போயஸ் கார்டன், அண்ணா நகரில் கிளைகள் உள்ளன. இந்நிலையில், அதன் மூன்றாவது கிளை ஈசிஆரில் நேற்று(அக்.29) தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையை நடிகரும், மறைந்த மருத்துவர் சேதுராமனின் நண்பருமான சந்தானம் திறந்துவைத்தார்.
திறப்புவிழாவில், நடிகர்கள் வெங்கட் பிரபு, பாபி சிம்ஹா, பூர்ணிமா பாக்யராஜ், சதீஷ், ஆரவ், தர்ஷன், சன்சிதா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஜி கிளினிக்கின் தலைமை செயல் அலுவலரும், மருத்துவர் சேதுராமனின் மனைவியுமான உமையாளுக்கு, அனைவரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த மருத்துவமனை இன்று(அக்.30) முதல் செயல்பட தொடங்குகிறது. நிகழ்ச்சியில் பேசிய உமா சேதுராமன், "ஈசிஆரி-ல் ஜி கிளினிக்கின் கிளையைத் திறக்க வேண்டும் என்பது எனது கணவர் சேதுராமனின் கனவுத் திட்டம். அவருடைய பிறந்தநாளில் இதை நனவாக்கியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி. நோயாளிகளை அணுகுவதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் சேதுராமன் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும் கனிவையும் சற்றும் குறையாமல் சிகிச்சை அளிக்கும்வகையில் இந்த புதிய கிளையும் செயல்படும்" என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.