சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் நேற்று (டிச.12) தொடங்கி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சிறப்பு முகாம்களில் மக்கள் தங்கள் அசல் ஆவணங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆவணங்கள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ள பாதிப்பினை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மக்களின் இயல்பு வாழக்கையினை மீட்டெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தினை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (டிச.13) ஆய்வு செய்தார்.
பின்னர், ராயபுரம் மண்டலம், வார்டு-50, வெங்கடேசன் தெருவில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் மழைநீர் வடிந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றுதல் மற்றும் பொது குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களிடமும் உரிய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், “மழைநீர் வடிந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாதவகையில், நாளொன்றுக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நிலையான முகாம்களாகவும், நடமாடும் மருத்துவ முகாம்களாகவும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து தெளித்தல் மற்றும் கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் சென்று அடைப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் அவற்றை சீர்செய்யும் பணிகளும் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உட்புறச் சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யும் பணிகள் தற்பொழுது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு தனி கவனம் செலுத்தி, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை பள்ளிகளில் தற்பொழுது அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஒகேனக்கலில் ஆய்வு!