சென்னை: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் கன்சல்ட்டிங் எடிட்டர் அபிஜித் மஜூம்தார் கட்டுரை எழுதியிருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்ததாகக் கூறி, அபிஜித் மஜூம்தார் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அபிஜித் மஜூம்தார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜராகி, வழக்குப்பதிவு செய்தது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறினார். தொடர்ந்து காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, மனுதாரரை கைது செய்யும் நோக்கம் தற்போது இல்லை எனவும், விசாரணைக்கு ஆஜராகுமாறு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, நவம்பர் 8ம் தேதி சென்னை சைபர் க்ரைம் போலீசார் முன்பு ஆஜராகும்படி அபிஜித் மஜூம்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தலைவர் பரிந்துரை கோப்புகளை மீண்டும் நிராகரித்த ஆளுநர்.. முறைகேடு புகாருக்கு ஆளான நபருக்கு உறுப்பினர் பதவியா? எனக் கேள்வி!