சென்னை: மனநோய் மற்றும் தூக்கத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகள், தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய, மாநிலம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முறைகேடாக விற்பனை செய்யப்படும் மருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மருந்துக்கடைகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சென்னை பெருங்குடி திருமலை நகர்ப் பகுதியில் உள்ள மருந்துக்கடையில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த கடையில் அதிகாரிகள் சோதனை செய்த போது மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த கடைக்கு கொட்டிவாக்கம் சரக மருந்துகள் ஆய்வாளர் சீல் வைத்தார். மேலும் மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டத்தின் கீழ், அக்கடையின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடையின் உரிமம் விரைவில் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்!