சென்னை: சட்டமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 26)நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசும் போது “நலிவடைந்த மின் உற்பத்தி நிலையங்களை குறைந்த விலையில் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த திறனுடைய மின் நிலையங்கள், அதிக திறனுள்ள மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும், மேல்நிலை மின்வழிப்பாதைகள், புதைவட மின் பாதைகளாக மாற்றி அமைக்கப்படும்.
மரபுசாரா மின் உற்பத்தித் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். மின் கலன் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மின் மாற்றிகளில் ஏற்படும் இழப்புகளை குறைக்க நடவடிக்கை மற்றும் TNEB 2.0 திட்டத்தின் கீழ் தரமான, தடையற்ற மின்சாரத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப, வணிக இழப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மின் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு இருக்கிறது. பல மாநிலங்கள் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை அறிவித்திருக்கின்றன. நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், திமுக ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
மின்னகத்துக்கு 7,82,177 புகார்கள் வந்ததில் 99%-க்கும் மேலான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு ஓராண்டில் மகத்தான சாதனைகளை புரிந்துள்ளது. கேங்மென் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும். 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும்.
திமுக ஆட்சிக்கு வந்த போது 5425 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அதில் 45 கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த கடையும் புதிதாக திறக்கப்படவில்லை. இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 7,814 கோடி ரூபாய் அளவுக்கு நடப்பாண்டில் மின்சார வாரியம் கூடுதலாக வருவாய் ஈட்டியுள்ளது” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க:'திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை குறிப்பிடவில்லை' - அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!