சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த ஆசாமி, இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
அதனால், அச்சமடைந்த இளம்பெண் அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவிக்க, அவர்கள் போதை ஆசாமியை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது, தான் ஆர்.பி.எப் போலீஸ் என கூறிய அந்த நபர், பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை தாக்கியுள்ளார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி அவரை பிடித்து வைத்துக் கொண்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாம்பரம் போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக்(27) என்பதும், அவர் தெலுங்கானா மாநிலம் நால்கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
விசாரணையின்போது, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிலர், சீனிவாஸ் நாயக்கிற்கு ஆதரவாக பேசியதால் கோபமடைந்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவரை தாக்குவோம் என்றும், இதேபோல் உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு நிகழ்ந்திருந்தால் விட்டு விடுவீர்களா? என்றும் கேட்டு கொந்தளிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போதையில் இருந்த சீனிவாஸிடம் விவரங்களை பெற்றுக் கொண்ட போலீசார், நாளை வரும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மதுபோதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக்கை பணியிடை நீக்கம் செய்து, சென்னை ரயில்வே கோட்ட ஆணையர் செந்தில்குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சீனிவாஸின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், அவர் சில பெண்களை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ந்தது - இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!