சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று (ஏப்ரல் 30) மதியம் அகர்தலாவிலிருந்து இண்டிகோ விமான சேவை விமானம் வந்தது.
அதில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ரூபல் ஹுசைன் (22), முக்தா ரானி சர்கர் (18) காதல் ஜோடி வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வருவதாக, அகர்தலா காவல் துறையினர் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் விமானத்திற்கு வந்த பயணிகளை மத்திய தொழில்படைப் பாதுகாப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அதில் வந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடியைப் பிடித்து விமான நிலைய காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் காதலித்துவருவதாகவும், வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் சென்னைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முக்தா ரானி சர்கர் சிட்லபாக்கம் காவல் எல்லைக்குள்பட்ட அரசு மகளிர் காப்பகத்திலும், ரூபல் ஹுசைன் விமான நிலைய காவல் பாதுகாப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திரிபுரா காவல் துறையினர் காதல் ஜோடியின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் இன்று (மே 1) சென்னை வந்து இருவரையும் அழைத்துச் செல்கின்றனர்.