சென்னை: தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் ஆர் என் ரவியின் திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை, நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்து வந்தார். இதை அடுத்து தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் உடனடியாக ஆளுநர் ரவி நீண்ட காலமாகக் கிடப்பில் வைத்திருந்த, பத்து மசோதாக்களையும் தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். இதை அடுத்து தமிழ்நாடு சட்டப் பேரவை சனிக்கிழமை அவசரக் கூட்டமாகக் கூடியது. அந்தக் கூட்டத்தில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த, பத்து மசோதாக்களையும், மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் ஆர் என் ரவி, நேற்று (நவ 19) விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையிலிருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநருடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர்.
டெல்லி சென்ற ரவி, ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டது. இதற்கிடையே ஆர் என் ரவி மீது, தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று 20 ஆம் தேதி டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரக்கூடிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் தாமதமாக வந்ததால், சென்னை விமான நிலையத்திலிருந்து 5:15க்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம் 6:00 மணிக்குச் சென்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழக ஆளுநர் வழக்கமாகச் சென்னை விமான நிலையம் கேட் நம்பர் 6 வழியாக வெளியூர்க்குப் பயணம் செல்லும் நிலையில் முதல் முறை வழக்கத்துக்கு மாறாகச் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பொதுமக்கள் பயணிக்கும் புறப்பாடு பகுதி ஒன்று வழியாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காக்கா, கழுகு கதைகளால் எந்த பிரயோஜனமும் இல்லை.. உழைத்தால் மட்டுமே உயர முடியும் - லெஜண்ட் சரவணன்!