சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று (பிப்ரவரி 25) பணி ஓய்வுபெற்றார். இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. 2013இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக புஷ்பா சத்தியநாராயணா பதவியேற்றார். இவர் திருவாரூரின் மன்னார்குடியில் 1960ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்தவர்.
1985ஆம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். பின்னர் 28 ஆண்டுகள் உரிமையியல் வழக்குகளில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். கல்வி நிறுவனப் பணியாளர்களுக்கு இஎஸ்இ பொருந்தும் என மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு, புஷ்பா சத்தியநாராயணா தலைமை வகித்துள்ளார்.
பணியாற்றியதில் திருப்தி
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுசென்ற விவகாரத்தில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளார். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துகளை நீக்கியது, நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் எனத் தீர்ப்பளித்தது உள்ளிட்ட பரபரப்பான வழக்குகளையும் இவர் கையாண்டுள்ளார்.
நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று (பிப்ரவரி 25) அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பேசுகையில், “குடும்பத்தையும், பணியையும் சிறப்பாக நடத்துவது கயிற்றின் மேல் நடப்பது போன்றது. அதில் திறம்படச் செயல்பட்டுள்ளேன். அர்த்தமுள்ள வகையில் பணியாற்றியிருப்பது குறித்து திருப்தி அடைகிறேன். நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை.
அனைத்து மகளிர் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் என்னை இடம் பெறச்செய்த முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு நன்றி. கரோனா காலகட்டத்தில் இரண்டு லட்சத்து 80 வழக்குகளை முடித்து, நாட்டிலேயே அதிக வழக்குகளை முடித்த இரண்டாவது உயர் நீதிமன்றம் என்ற பெருமைக்கு காரணமாக இருந்த வழக்கறிஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 'வலிமை' படக்குழுவைப் பாராட்டி விக்னேஷ் சிவன் ட்வீட்!