சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், ஆயுட்காலச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது குறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ. அன்பு ஆபிரகாம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 21 ஆயிரத்து 73-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலர்கள் பணியாற்றிவருகிறார்கள்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஏறத்தாழ 13 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்றோருக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற அலுவலகம் அல்லது பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி திங்கள் தொடங்கி, மார்ச் திங்கள் 15ஆம் தேதிக்குள்ளாக, அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமையகத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ் சாலை தொழிற்கூடத்தில் (PRD), மண்டல தொழிற்கூடத்தில் (RWS) ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்ததந்த அலுவலகத்தில் ஆயுட்காலச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், கே.கே. நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் (K.K.Nagar Printing Press) ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் கே.கே. நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் (Chrompet Workshop) ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்காலச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விடுபட்டவர்கள் தலைமை அலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓய்வூதியப் பிரிவு 044-2345 5801 Extn. 268 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும் - செந்தில்பாலாஜி