சென்னை: தகவல் தொழில் நுட்ப வேலைகளில் பணியமர்த்துவதாக கூறி கம்போடியாவில் சட்டவிரோத இணையதள வேலைகளைச் செய்ய தமிழர்கள் கட்டாயப்படுத்தபட்டுள்ளனர். அவ்வேலைகளைச் செய்ய மறுத்தால், கடுமையாக தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அந்த அடிப்படையில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்பார்வையில் அயலகத் தமிழர் நலத்துறை கம்போடியாவிலுள்ள இந்திய தூதரகத்துடன் மேற்கொண்டதன் பேரில் தற்போது இரண்டாம் கட்டமாக 8 தமிழர்கள் மீட்கப்பட்டு, கம்போடியா நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அழைத்து வரப்பட்ட எட்டு நபர்களையும் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதியும் செய்து தரப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான் கூறுகையில், ”தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு வாழ்வாதாரத்திற்காக படித்த இளைஞர்கள் வேலை தேடி செல்கின்றனர். அவர்கள் சில நாடுகளில் நல்ல நிலைமையிலும், சில நாடுகளில் இது போன்று மாற்று வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தி துன்பப்படுத்தப்படுகிறார்கள்.
இதே போல தான் மியான்மர், கம்போடியா நாட்டிற்கு வேலை தேடிச் சென்றவர்கள் சிக்கிக்கொண்டனர். இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு தகவல் வந்தவுடன், அனைவரையும் மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
மியான்மர் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்கள் முதல் கட்டமாக 18 நபர்களும் இரண்டாவது கட்டமாக 8 நபர்களும் மொத்தம் 26 நபர்களும் மீட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அதேபோல் கம்போடிய நாட்டில் இருந்து நேற்று, முதல் கட்டமாக 8 நபர்களும் இன்று 8 நபர்களும் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இதுவரை தகவல் தெரிவித்த 42 பேரை மீட்டுள்ளோம், இன்னும் சிலர் அங்கு இருப்பதாக தகவல் உள்ளது. அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேலை கிடைத்துள்ளதால் அதில் பிரச்சனை இல்லை என கூறுகிறார்கள். ஆனால் அவர்களும் நாடு திரும்ப விரும்பினால் தமிழ்நாடு அரசுக்கு தகவல் கொடுத்து பதிவு செய்தால் அவர்களையும் மீட்டு வருவோம்.
இவர்களை தமிழ்நாடு அழைத்து வந்து வீட்டிற்கு அனுப்பும் வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். நல்ல வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றும் போலி ஏஜென்ட் இருவர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனஎ. மேலும் போலி ஏஜன்ட்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியதாக என்.ஐ.ஏ தகவல்!