சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்துவதால் மக்கள் சார்ந்த பணிகளும், அரசு துறையில் ஊழல் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ள நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் வி. இறையன்பு விருப்ப ஓய்வு பெற்று, தலைமை தகவல் ஆணையர் பதவியைத் தேர்வு செய்யவும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஆர். ராஜகோபால் கடந்த நவம்பரில் பதவியில் இருந்து விலகியபோது, டிசம்பர் முதல் வாரத்தில் பதவிக்காலம் முடிவடைய இருந்ததால், மற்ற நான்கு தகவல் ஆணையர்களும் தங்களது பதவியை விட்டு விலகினார்கள். இருப்பினும், கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், திமுக அரசு, நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் மூன்று பேர் கொண்ட தேடல் குழுவை அமைத்து, காலியாக உள்ள பதவிகளுக்கான பெயர்களைக் கொண்ட குழுவை தேர்வு செய்தது.
இக்குழுவில் உள்ள மற்ற இருவர் - ஒரு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 16, 2022 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அது இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் தகவல் ஆணையத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைப் பொறுத்தவரை, ஓய்வுபெற்ற பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தகவல் ஆணையத்தில் பதவி என்பது தங்களுக்கு கிடைத்த இரண்டாவது பெருமைக்குரிய பணியாகும். உதாரணமாக முந்தைய ஐந்து தலைமை தகவல் ஆணையர்களில், நான்கு பேர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்.
குறிப்பாக தலைமைச் செயலாளராக இருந்த கே.ஸ்ரீபதி மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஆர்.ராஜகோபாலின் செயலாளராக இருந்த ஷீலா பிரியா உள்ளிட்டோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆவர். மேலும் முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம், ஓய்வுக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக தலைமைச் செயலாளர் வி. இறையன்பு விருப்ப ஓய்வுபெற்று தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் உயர்மட்ட நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் அல்லது நம்பிக்கைக்குரிய ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வரின் ஆலோசகர்களாக பதவியில் அமர்த்தும் ஜெயலலிதாவின் நடைமுறையை தற்போதைய அரசு புதுப்பிக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர்களுக்கு தகவல் ஆணையத்தில் பதவி வழங்குவதைத் தொடரலாம்", என மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார். மேலும், தற்போதைய தலைமைச் செயலாளர் வி.இறையன்பு அதைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.
"நாட்டிலுள்ள மாநில தகவல் ஆணையங்களில், தமிழக தகவல் ஆணையத்தின் செயல்திறன் மிகவும் மோசமாக கருதப்படுகிறது. மேலும் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் காலியிடங்களை நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். சாதாரண குடிமக்கள் கூட முதியோர் ஓய்வூதியம் (பண உதவி) பற்றிய தகவல் தேவைக்கு மாதக்கணக்கில் காத்திருக்க வைக்கப்படுகிறது.
ஆர்.டி.ஐ என்பது ஊழலைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு ஆயுதம். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, தகவல் ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு துறைகளில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதில், உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் காலதாமதம் செய்வது, அவற்றை மூடிமறைக்க மட்டுமே உதவும்", என்கிறார் அறப்போர் இயக்க உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன்.
இதே போல முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி தேவசகாயம் நம்மிடம் கூறுகையில், "ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு லாபகரமான வெகுமதி அளிக்கும் நடைமுறையை தொடர்ந்து அரசு கடைபிடிக்கிறது. இது தவறான ஒன்றாகும். சில அதிகாரிகள் நல்ல முறையில் எந்த ஒரு பணியையும் திறம்பட செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவு. இனியும் தாமதிக்காமல் நேர்மையுடன் திறமையானவர்களைக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதே ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு", என கூறினார்.
இதையும் படிங்க: கல்வியும் மருத்துவமும் சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்