சென்னை: நாட்டின் 76வது சுதந்திர தின விழா, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான இறுதி நாள் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியானது, இன்று (ஆகஸ்ட் 13) காலை 9 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது.
சென்னை, கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்றது.
முதலில், தமிழ்நாடு முதலமைச்சரை காவல் துறை வாகன அணிவகுப்புடன் அவரது இல்லத்தில் இருந்து அழைத்து வருவது போன்ற ஒத்திகையானது மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட ஏழு படைப் பிரிவினர் பங்கேற்கும் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு, கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு துறை சார்ந்த விருதுகளை முதலமைச்சர் வழங்குவது போன்ற நிகழ்வுகளும் ஒத்திகையாக நடத்தப்பட்டது. இறுதியாக விருது பெற்றவர்கள் உடன் முதலமைச்சர் குழு புகைப்படத்தை எடுத்துக் கொள்வது போன்றும், அப்போது விருது பெற வருபவர்கள் மேடையில் எப்படி செயல்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு அறிவுரையாக வழங்கப்பட்டது. மேலும் 76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இறுதியாக ஒத்திகை நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த ஒத்திகை நிகழ்வானது இன்று காலை 9 மணி முதல் நடைபெறுவதால் ஒத்திகை முடியும் நேரம் வரை சாலைகள் மக்கள் பொது பயன்பாட்டிற்கு முடக்கபடும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. முன்னதாக, முதல் நாள் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 4ஆம் தேதியும், இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 10ஆம் தேதியிலும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுதந்திர தின விழாவிற்காக மேடைகள் அமைக்கும் பணிகள் தலைமைச் செயலகம் எதிரில் உள்ள பூங்காவில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரலேகாவுக்கு 'மாநில இளைஞர் விருது' அறிவிப்பு!