சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையம் திறப்பு, வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம், ராமகிருஷ்ண மடத்தின் 125 ஆவது ஆண்டு விழா, நலத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக எப்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்தாலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமான நிலையம் சென்று வரவேற்பது வழக்கமான ஒன்று.
அதிலும், கடந்த முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, திண்டுக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சுமார் 1 மணி நேரம் பிரதமர் மோடி உடன் அண்ணாமலை அவரது காரில் பயணம் செய்தார். ஆனால் இன்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை இல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
தனித்து போட்டியிடும் நோக்கத்தில் அண்ணாமலை செயல்படுவதாகவும், அதற்கு பாஜகவில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதில் சமீபத்தில் அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்திற்கு, அமித்ஷா கூட்டணிதான் தொடர்கிறது என கூறியுள்ளதாகவும், இன்னும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யவில்லை எனவும் அண்ணாமலை கூறி இருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து, பாஜகவின் மேலிடத்திற்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து தனித்து போட்டி என்ற மனநிலையில்தான் அண்ணாமலை பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னை வந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.
இது போன்ற விஷயங்களால் அண்ணாமலையின் மீது டெல்லி மேலிடம் சற்று அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை செல்லவில்லை. இது குறித்து பாஜக வட்டாரங்களில் விசாரிக்கையில், "கர்நாடகத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திரா பிரதான் ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். கர்நாடக தேர்தலில் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதால், அவர் அதிக பணிச் சுமையில் இருக்கிறார்.
வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் பணி நிறைவடைந்தால், அண்ணாமலை இன்று இரவு அல்லது நாளை (ஏப்ரல் 9) காலை சென்னை திரும்புவார். நாளை முதுமலையில், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளியை பிரதமர் சந்திக்கிறார். அப்போது அண்ணாமலை அங்கு சென்று பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது" என கூறினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று துவக்கி வைக்கப்பட்ட 3 புதிய ரயில் சேவைகள் விபரம்!