நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று (ஆக.10) உலகம் முழுவதும் வெளியாகியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகியது. இப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டப் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்கள் ரஜினியின் புகைப்படங்கள் நிறைந்த பேனர்களுக்கு மேளதாளங்களுடன் சென்று மாலை அணிவித்து பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் வைத்து பாடல்கள் முழங்க நடனம் ஆடி கொண்டாடி ரசிகர்கள் படம் பார்த்தனர்.
குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு இசையமைப்பாளர் அனிருத், நடிகர் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனேன் ஆகியோர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரம்யா கிருஷ்ணன், “ஜெயிலர் திரைப்படம் சூப்பர் படம். பார்த்து முடித்த பிறகும் புல் அரிக்குது. இதுதான் முதன்முறையாக முதல் காட்சி பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தலைவர் தலைவர்தான். பேன் இந்தியா படத்தை விட இந்தப் படம் மேலே போகும்” என்றார்.
அனிருத் கூறுகையில், “படம் மிகவும் நன்றாக உள்ளது. எதிர்பார்க்காத சீன்களுக்கு எல்லாம் மக்கள் திரையரங்கில் வரவேற்பு கொடுத்தனர். தலைவர் படம் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
நடிகர் வசந்த் ரவி கூறுகையில், “படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. ரஜினி சார் நடித்து சமீபத்தில் வந்த படத்தைவிட இதில் மிரட்டி உள்ளார். அனைவரும் திரையரங்கு சென்று படம் பார்க்க வேண்டும். ரஜினி சாரை எல்லோரும் ரொம்ப வருடம் கழித்து இப்படி பார்த்துள்ளோம். அனிருத் இசைப் படத்துக்கு வலு சேர்த்துள்ளது.
நெல்சனுக்கு நன்றி, மிக முக்கிய கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு. இந்த கதாப்பாத்திரத்தில் என்னைத் தவிர வேறுயாரும் நடிக்க முடியாதுனு ரஜினி சார் படப்பிடிப்பில் என்னிடம் கூறினார். ரஜினி படத்தில் நான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததால் எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்'' என்றார்.
தொடர்ந்து மிர்னா மேனேன் கூறுகையில், “படத்தின் கிளைமேக்ஸில் இருந்து என்னால் இன்னும் வெளியே வரமுடியவில்லை. அவ்வளவு எமோஷனலாக உள்ளது. படக்குழுவுக்கு முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சினிமா எவ்வளவோ மாறிவிட்டது. என்ன ரோல் பண்றோமுனு முக்கியம் இல்லை. என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்'' என்றார்.
இதையும் படிங்க: jailer fdfs: ஓசூரில் "ஜெயிலர்" திரைப்படத்தின் முதல் காட்சியை மலர் தூவி கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!