பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, முன்னாள் சென்னை மேயரும், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினருமான கராத்தே தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினிகாந்த் ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்தது. ஆனால், கரோனா காரணமாக அது தள்ளிப்போகிறது. நவம்பர் மாதத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார். அதேபோன்று ரஜினி தனியாகத்தான் கட்சி ஆரம்பிப்பார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் பேங்காக் போனது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனாவிலிருந்து மீள முடியும். நாவலரை அசிங்கப்படுத்தியவர் ஸ்டாலின். ஆனால், அவர் அறிவாலயத்தில் படம் திறப்பது எந்த விதத்தில் நியாயம்.
காங்கிரஸ் நிர்வாகிகள்தான் இந்தக் குளறுபடிக்கு காரணம். ஸ்டாலின் முதலில் சரியாக இருந்துவிட்டு தமிழ்நாடு அரசின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு, கார்த்திக் சிதம்பரம் தலைவராக வருவார் என்ற தகவல் வந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க:ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் - வ. கௌதமன்