இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் எனப் போற்றிக் கொண்டாடுமளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு, திராவிட -தேசிய கட்சிகளின் அரசியல் தவறுகளால் தனது நிலப்பகுதிகளைப் பெருமளவு இழந்தபோதும் தமிழர்கள் தேசிய இனம் எனப் பறைசாற்றும் பெருமையோடு தமிழர்களின் பெருந்தாயகமாகவும் பன்னெடுங்காலமாகத் திகழ்கிறது.
உலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் தாங்கள் வாழும் நிலப்பரப்பில் தங்கள் தாய்மொழியின் அடிப்படையிலேயே நாடுகளாக உருவாகி தங்களுக்கெனப் பண்பாட்டு அடையாளங்களோடு திகழ்ந்து வருகின்றன. மொழி தான் ஒரு தேசிய இனத்தின் முகமும், முகவரியுமாகத் திகழ்கிறது. அந்த வகையில் இந்திய ஒன்றிய அரசின் கீழ் வாழ்கின்ற பல்வேறு தேசிய இனங்கள் மொழிவாரி மாநிலங்களாக 1956ஆம் ஆண்டு பிரிந்தன.
அதன் தொடர்ச்சியாக உலகெங்கும் பரவி வாழும் 12 கோடிக்கும் மேலான தமிழர்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு ஒரு மாநிலமாக 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
அந்த கடமையை நம்முள் நிலை நிறுத்திட, நினைவூட்டிட செய்கின்ற நாளாக 'தமிழ்நாடு நாள்' என தமிழ்நாடு அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, தமிழ் தேசிய திருநாளாகும். வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி "தமிழ்நாடு நாளை" தாயகப் பேருவகையோடு பேரெழுச்சியாகக் கொண்டாட முன்னேற்பாடுகளையும் செய்திடுவோம்.
தமிழ் தேசிய இனத்தின் தாய் நிலமான தமிழ்நாடு மொழிவாரியாக அங்கீகரிக்கப்பட்ட திருநாளை, நாம் தமிழர் கட்சி வடிவமைத்து அளித்திருக்கிற, ஒட்டுமொத்த தமிழர்களுக்கென பொதுவாக அமைந்திருக்கிற, அரசியல் சாதி மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்த தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றி, தமிழ்நாட்டுப் பாடலை இசைத்து இனிப்புகள் வழங்கி பெருமையோடு தமிழர்கள் அனைவரும் தமிழ் நாடெங்கும் கொண்டாட வேண்டுமென ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்' - ராமதாஸ்