சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (நவ.11) கரையைக் கடப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நேற்று (நவ.10) மாலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாம்பரம் அடுத்த செம்பாக்கம், திருமலை நகர்ப் பகுதிகளில் தொடர் கனமழையால் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல் புறநகர் பகுதிகளான பல்லாவரம், வரதராஜபுரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, முடிச்சூர், சேலையூர் உள்ளிட்டப் பகுதிகளில் பெய்த கன மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் அத்தியாவசியத் தேவையான பால், மருந்து உள்ளிட்டப் பொருள்கள் வாங்குவதற்குக் கூட வெளியே செல்லமுடியாமல் தவிக்கின்றனர்.
மேலும் தாழ்வான சாலைகளில் ஆறு போல் மழை நீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் குட்டித் தீவு போல் காட்சியளிக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வபெருந்தகை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை