சென்னை: தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனைத்தொடர்ந்து, தாம்பரம், ஆலந்தூர், கிண்டி, பல்லாவரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் பரவலாக நேற்று இரவு முதல் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், முடிச்சூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மேலும், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அதிகாலை முதல் மழைநீர் தேங்காதவாறு மாநகராட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிணற்றில் புகும் மழைநீரால் மக்கள் அச்சம்: மேலும் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் அருகே முடிச்சூர் ரங்கா நகரில் சாலையோரம் உள்ள பழமையான தனியார் விவசாய கிணற்றின் பக்க சுவர் திடீரென இடிந்து கிணற்றுக்குள் சரிந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, முடிச்சூர் ரங்கா நகரின் சாலையோரம் உள்ள பழமையான தனியார் விவசாய கிணற்றின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து கிணற்றுக்குள் சரிந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் எல்லாம் அக்கிணற்றுக்குள் வழிந்தோடியது. அப்போது ஏற்பட்ட பெரும் சத்தத்தினால், கிணறே கொந்தளிப்பது போல இருந்ததாக அப்பகுதியினர் அச்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்: இதனிடையே இந்த தொடர் கனமழை காரணமாக, வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு அதிகமாக மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் அறியாமல் சென்று தண்ணீரில் மாட்டிக் கொள்வார்கள் என்பதற்காக வேளச்சேரி போக்குவரத்து போலீசார் சுரங்கப்பாதை முகப்பு வாயிலில் பேரிகார்ட் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், தரமணி, பெருங்குடி, ஓஎம்ஆர் சாலையிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் மடிப்பாக்கம், தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் செல்வதற்காக இந்த சுரங்கப்பாதையை தான் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுரங்கப்பாதையில் சிக்கிய கார் மீட்பு: அதேபோல, பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் அங்கு வந்த கார் ஒன்று சிக்கி தவித்தது. நீண்ட நேரத்திற்குப் பின்பு, மோட்டார் மூலம் மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மழைநீரிலிருந்த கார் மீட்கப்பட்டது. இதனையடுத்து அவ்வழியாக போக்குவரத்து சீராகியுள்ளது.
மரம் முறிந்து விழுந்த விபத்து; ஒருவர் உயிர்த் தப்பினார்: இந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நங்கநல்லூர் 30வது தெருவில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.
இதேபோல, பழவந்தாங்கல் காவல் நிலையம் அருகே மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் முழுவதும் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Chennai Rain: ஆவடியிலேயே நிறுத்தப்பட்ட சென்னை ரயில்கள் : டாக்சிக்களில் படையெடுக்கும் மக்கள்