சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற்சங்க யூனியன் எஸ்.ஆர்.எம்.யு ஆலோசனைக் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக பல மாவட்டங்களில் உள்ள ரயில்வே பணியாளர்கள் சென்னை பெரம்பூருக்கு வந்தடைந்தனர். கூட்டம் முடிந்த ரயில்வே ஊழியர்கள், அவரவர் மாவட்டத்திற்கு திரும்பிச் செல்வதற்காக சிறப்பு ரயில் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊழியர்கள் சிலர் சென்னையில் உள்ள தங்களது நண்பர்களைச் சந்திக்க கொரட்டூர் பகுதிக்கு பெரம்பூரிலிருந்து ரயிலில் வந்தனர்.
சென்னை கொரட்டூரில் தண்டவாளத்தை கடக்கும் போது கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அதிவிரைவு ரயில் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் உடன் வந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து - கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து!