கடந்த ஜூலை 18ஆம் தேதி அமித் குமார் என்பவர் ஹவுரா விரைவு ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவருடன் இயல்பாகப் பேசி கவனத்தைத் திசைதிருப்பி, அவர் சாப்பிடும் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். சுயநினைவு இழந்த நிலையில் அவர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மயங்கிக் கிடந்தார். பின்னர் மயக்கமடைந்த அமித் குமாரை ரயில்வே காவலர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, ரயில்வே காவல்துறையினர் கொள்ளையனைத் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அந்த மர்ம நபர் பிடிபட்டார். பின்னர் விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுபாங்கர் சக்கர போர்தி(49) என்பது தெரியவந்தது. மேலும் இவர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் நன்றாகப் பேசி அவர்களது கவனத்தைத் திசைதிருப்பி அவர்கள் சாப்பிடும் பொருட்களில் மயக்க மருந்தைக் கலந்து கொடுப்பதாகத் தெரிவித்தார்.
பயணிகள் மயக்கமடைந்த பின்பு அவர்களிடம் உள்ள நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் திருடிய நகை மற்றும் பணத்தை வைத்து ஹவுரா, மும்பை, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நபர் மீது ஹவுரா, நாக்பூர், விஜயவாடா போன்ற ரயில்வே காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது. பின்னர் இவரிடமிருந்து மயக்க மாத்திரைகள், மயக்கமருந்து, நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.