சென்னை: என். சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருப்பது அறிவுக்கு பொருத்தமற்றது என்றும், ஆளுநரின் பொறுப்புக்கு உகந்த செயலும் அல்ல எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா-க்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்குவது என தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை முடிவெடுத்து, வரும் நவம்பர் 2ஆம் தேதி மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் நடத்தும் நிகழ்வில் வழங்க ஏற்பாடுகள் நடத்து வருகின்றன. இந்நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநரின் ஒப்புதலை பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு ஆவணங்களை ஆளுநருக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியுள்ளவர். நாடு முழுவதும் பரந்து வாழும் விவசாயிகளை சங்க அமைப்பில் திரட்டுவதில் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர். மூத்த அரசியல் தலைவர்கள் காமராஜ், அண்ணா, ஜீவானந்தம், கருணாநிதி போன்றோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளில் 685.68 கி.மீ. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு - சென்னை மாநகராட்சி தகவல்!
மேலும், தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர்’ விருது கொடுத்து கௌரவித்துள்ளது. தமிழக மக்களின் பெருமதிப்பை பெற்ற பொதுவாழ்வுக்குரிய என். சங்கரய்யாவுக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கும் தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருப்பது அறிவுக்கு பொருத்தமற்றது. ஆளுநரின் பொறுப்புக்கு உகந்த செயலும் அல்ல.
ஆளுநரின் அநாகரிக செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் முதல் லியோ போலி டிக்கெட் வரை சென்னையின் முக்கிய குற்றச் செய்திகள்!