சென்னை: கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜெகர்த்தா நோக்கி நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 356 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் உட்பட சுமார் 368 நபர்கள் அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டு இருந்தனர்.
விமானம் சுமார் 39 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானியும், விமானப் பொறியாளர்களும் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து விமானி ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு விமானம் சென்னை விமான நிலையம் அருகே இருப்பது தெரியவந்ததால். இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாக தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டுள்ளனர்.
உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டனர். பின்னர் அவர்கள் விமானத்தை சென்னையில் தரை இறக்க அனுமதிப்பதோடு, விமானத்தை பழுது பார்க்க தேவையான உதவிகளை செய்யும் படியும் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த விமானம் நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. ஆனால் பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு தேவையான உணவு போன்றவைகளை சென்னையில் உள்ள கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவன நிறுவனம் ஏற்பாடு செய்தது. அதோடு விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை விமான பொறியாளர்கள் குழுவினர் சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக பழுது பார்க்கும் பணிகள் நடந்தது. அதன் பின்பு விமானம் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜெகத்ராவுக்கு புறப்பட்டு சென்றது.
கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 39 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கி தொழில்நுட்ப கோளாறு செய்த பின்பு சுமார் 6 மணி நேரம் தாமதமாக இந்த விமானம் சென்னையில் இருந்து இந்தோனேசிய நாட்டிற்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உடனடியாக எடுத்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டு 368 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
மேலும் ஏற்கனவே கடந்த ஞாயிறு அன்று சென்னையில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா சென்ற கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் ஓடுபாதையிலே அவசரமாக நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து ஒரே ஏர்லைன்ஸ் விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரை இறங்கிய சம்பவம் விமான பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.