சென்னை: விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நெல் கொள்முதலை ஒரு மாதம் முன்னதாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், 'செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நெல் அறுவடைக் காலம், அப்போது தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டும் இணைந்து விளைச்சலில் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால், தமிழ்நாடு அரசின் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து குறுவை நெல் அறுவடை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இந்த ஆண்டு அக்டோபர் 1-க்குப் பதிலாக செப்டம்பர் 1ஆம் தேதி முதலே நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.
நெல் கொள்முதலானது முன்கூட்டியே தொடங்கும் பட்சத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இருக்கும். மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்த பருவத்திற்கு ஏற்படுத்தித் தர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு